Tuesday, May 17, 2011

சாத்தியமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்கத் தயார்! எஸ்.எம்.கிருஷ்ணா செவ்வாய், 17 மே 2011

இந்தியாவானது, சாத்தியமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்கத் தயாரகவுள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவை நேற்று சந்தித்தபோதெ அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையை நாம் எப்போதும் நம்பகத்தகுந்த பங்காளியாகவும், மாறாநிலை கொண்ட நண்பனாகவும் எதிர்பார்க்கின்றோம் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய மீனவர்களின் பாதுகாப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய மீனவர்கள் இலங்கையின் கடற்பரப்பிற்குள் நுழைந்தால் பலாத்காரத்தை பிரயோகிக்க வேண்டாம் என்று எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இச்சந்திப்பின்போது அமைச்சர் பீரிஸ், நிபுணர்குழு  அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாடு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.



இச்சந்திப்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமாராவ்,  இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த்,  இலங்கை வெளிவிவகார செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது  நிபுணர்குழு அறிக்கை மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை  நேற்றைய தினம் மாலை இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் இந்தியாவிலுள்ள சுமார் 50 வெளிநாட்டுத் தூதுவர்களையும் சந்தித்து நிபுணர்குழு தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை எடுத்துக் கூறவும் தீர்மானித்திருந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தலைமையிலான குழுவினர் இன்றும் பல இந்திய முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment