Monday, May 30, 2011

ஐ.நா மனிதஉரிமைப் பேரவை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்! இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு


ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் மனிதஉரிமைகள் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் இலங்கை அரசின் சார்பில் கலந்து கொள்கின்றனர்.


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 17வது கூட்டத்தொடர் இன்று தொடக்கம் ஜூன் 17ம் திகதி வரை நடைபெறும். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்டக் குழு நேற்று முன்தினம் ஜெனீவா சென்றுள்ளது. இலங்கை தொடர்பான அறிக்கை ஒன்றை நீதிக்குப் புறம்பான படுக்கொலைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் இன்றைய கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட பின்னர் இலங்கை தொடர்பாக இவர் சமர்ப்பிக்கவுள்ள முதலாவது அறிக்கை இதுவாகும். இந்த அறிக்கையிலேயே சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, தமிழ்க்கைதிகள் இலங்கைப் படையினர் சுட்டுக் கொல்லும் காட்சிகள் அடங்கிய காணொளி மற்றும் அதுதொடர்பான தொழில்நுட்ப ஆய்வு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

அதேவேளை, இன்றைய தினம் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆண்டறிக்கையை சமர்ப்பித்த பின்னர், சுவிற்சர்லாந்து நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் இலங்கையின் மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க உரையாற்றவுள்ளார். இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஐ.நா பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், உயர்த்துவதற்குமான தேசிய செயற்திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையையும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு சந்திக்கவுள்ளது.

No comments:

Post a Comment