இறுதிக்கட்ட யுத்தத்தின்போது களநிலைகளில் முன்னின்று பணியாற்றிய இராணுவ அதிகாரிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்து இராணுவ அறிக்கையொன்று தயாரித்துவருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இராணுவத்தின் இந்த அறிக்கை, மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முறியடிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று இறுதிக் கட்டப்போரில் பங்கேற்ற முக்கிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட படைத் தளபதிகளை உள்ளடக்கிய இந்தக்குழு, அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த அறிக்கை போர்முனையில் பணியாற்றிய இராணுவ அதிகாரிகளின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.அத்துடன் விடுதலைப்புலிகளின் பிடியில் இருந்து பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகள் பற்றிய அனுபவங்களையும் உள்ளடக்கியிருக்கும்.
51, 53, 55, 57, 58, 59வது டிவிசன்கள் மற்றும் அவற்றுக்குத் துணையாக செயற்பட்டசிறப்புப் படைப்பிரிவின் அணிகள், கொமாண்டோ உப குழுக்கள், சிறப்பு அதிரடிப்படை ஆகியவற்றினது போர்முனைத் தளபதிகள், மற்றும் கட்டளை அதிகாரிகளிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யவுள்ளதாக உயர் இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேவேளை, இராணுவத் தளபதியால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாவட்டங்களில் உள்ள பல இராணுவ அதிகாரிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment