Tuesday, May 31, 2011

மனிதஉரிமை பேரவையிடம் காலஅவகாசம் கேட்கும் இலங்கை!


மனிதஉரிமைகள் பேரவை அவசரப்படாமல் இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வு பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கு சிறிது காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் உரையாற்றிய போதே மகிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.


மகிந்த சமரசிங்க தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், போர் முடிவுற்ற பின்னர் அரசாங்கம் சுமார் 290,000 இடம்பயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கே முன்னுரிமை வழங்கி, நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த மக்களுக்கு வசதியான இருப்பிடங்களை பெற்றுக் கொடுத்தல், உணவு, பாதுகாப்பு, வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் பின்நிற்கவில்லை.

இடம்பெயர்ந்த 95 வீதமான மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டவுடன் ஏனையோர் மீள் குடியமர்த்தப்படுவார்கள். அரசபடைகளிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 11,644 முன்னாள் போராளிகளில் 6,530 பேர், முழுமையான புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வு பெற்று வரும் எஞ்சிய முன்னாள் போராளிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலமும், சட்டரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வது பற்றி தமிழ் அரசியல் கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சு நடத்தி வருகிறது. இந்த சவால்களுக்கு சிறந்த முறையில் முகம் கொடுக்கும் வகையில் நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.

அதன்மூலம் நீதி, நியாயத்தை நிலைநாட்டி, கடந்த காலத்தில் இந்த அழிவுகளுக்கு பொறுப்பாளிகள் யார் என்பதைக் கண்டறிவதிலும் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்றது. ஐ.நா பொதுச்செயலாளர் தமக்கு ஆலோசனை தெரிவிக்கும் குழுவை நியமிக்க முன்னரே அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

உண்மை, நீதி, இழைத்த தவறுகளை சரிசெய்தல் ஆகிய மூன்று முக்கிய செயற்பாடுகளின் கீழ் நல்லிணக்கப்பாட்டை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த காலத்தில் போரினாலும் வேறு செயற்பாடுகளினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த ஆணைக்குழுவின் முன் தங்கள் வேதனைகள் குறித்தும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியும் சாட்சியமளித்துள்ளனர்.

இவற்றை நன்கு ஆராய்ந்து, இந்த ஆணைக்குழு அந்த மக்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதற்கு தவறாது என்பதையும், நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். முப்பதாண்டு காலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வொன்றை ஏற்படுத்தி தொடர்ந்தும் வன்முறைகள் ஏற்படுவதை தவிர்ப்பதே இந்த ஆணைக்குழுவின் நோக்கமாகும்.

இந்த ஆணைக்குழு தனது விசாரணை நடவடிக்கைகளை 2010 ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்து தொடர்ந்தும் தனது பணியை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆணைக்குழுவின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வு கிடைக்குமென்ற அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இந்த ஆணைக்குழுவின் பணிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல தகவல்களை பெறுவதற்காகவே இந்த காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, மனிதஉரிமைகள் பேரவை அவசரப்படாமல் இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வு பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கு சிறிது காலஅவகாசம் வழங்க வேண்டும். இந்த ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், ஓமந்தை தடுப்பு முகாமை மூடுதல், முன்னாள் போராளிகளில் பெரும்பாலானோரை விடுவித்தல், காணிப் பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வை காணுதல் ஆகியவற்றுடன் சட்டவிரோதமாக ஆயுதங்களை எந்தவொரு குழுவும் வைத்திருக்க கூடாது என்ற விதியையும் அரசாங்கம் கண்டிப்பாக கடைப்பிடித்து வருகிறது. ஐ.நாவின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மனிதஉரிமைகள் சாசனத்தை இலங்கை முறையாகக் கடைப்பிடிக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

இந்த செயற்பாடுகள் பற்றி நாம் காலத்துக்கு காலம் ஐ.நாவுக்கும் அதன் கிளைகளுக்கும் அறிவிக்கவும் தவறவில்லை. மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடனும் அங்கத்துவ நாடுகளுடன் நட்புறவுடன் உண்மையான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும் நாம் என்றுமே தயக்கம் காட்டியதுமில்லை.

இத்தகைய செயற்பாடுகளின் மூலம் அரசாங்கம் நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஐ.நா பொதுச்செயலாளருக்கு இலங்கை விவகாரம் குறித்து ஆலோசனை கூறும் எண்ணத்துடன் மட்டுமே, ஐ.நா நிபுணர்குழு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கையை பெரிதுபடுத்தி, சிலர் இலங்கை மீது குற்றம் கண்டுபிடிக்க எத்தனிப்பது நல்லதல்ல.

நடைமுறையிலுள்ள செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று, இந்தக் குழுவினர் தகவல்களை திரட்டி இந்த அறிக்கையை தயாரித்திருக்கின்றனர். எனவே, இந்த அறிக்கை குறித்து அவதானமாக இருக்க வேண்டியது அவசியம். இனிமேலாவது தவறான நடைமுறைகளை ஊக்குவிக்காத வகையில், இந்த ஆணைக்குழுவின் உறுப்புநாடுகள் செயற்பட வேண்டும்.

இந்தக் குழுவினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகார எல்லையை மீறி இந்த அறிக்கையை தயாரித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இலங்கை அரசாங்கத்தின் உள்ளூர் செயற்பாடுகள் குறித்து, ஏற்கனவே தாங்களே முடிவெடுத்ததற்கு அமைய இந்த அறிக்கையை இந்தக் குழு தயாரித்திருப்பது கண்டனத்திற்குரிய விடயமாகும்.

பயங்கரவாதத்தை அடக்கும் மனிதாபிமான நடவடிக்கையை, இந்த நாட்டு மக்களின் இறைமையை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நற்பணி என்று உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுக்க ஆயுதப்படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையைத் தரக் குறைவாக மதிப்பீடு செய்தது உண்மையிலேயே வேதனையளிக்கிறது.

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கையினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதுபற்றிய புள்ளி விபரங்கள் இந்தக் குழுவின் அறிக்கையில் வெளியிடப்படவில்லை. உறுதிசெய்யப்படாத விடயங்களையே இந்தக் குழு அறிக்கையில் சேர்த்துக் கொண்டுள்ளது. ஐ.நா சாசனத்துக்கு அமைய இலங்கையையும் ஏனைய நாடுகளைப் போன்று சரிசமமான முறையில் பாதுகாத்து வழிநடத்துவது, இந்த அமைப்பின் அசைக்க முடியாத ஒரு கடமையாகும்.

ஐ.நாவின் உயர் அதிகாரிகள் பக்கசார்பற்ற முறையிலும் சுதந்திரமாகவும், ஒளிவுமறைவற்ற முறையிலும் செயற்படுவது மிகவும் அவசியம். இந்த அடிப்படைத் தத்துவங்களை அவர்கள் கடைப்பிடிக்காமல் இருந்தால், ஐக்கிய நாடுகள் அமைப்புக்கே பெரும் கண்டனம் எழுவதற்கான வாய்ப்பும் உருவாகலாம்.

இறுதியாக பரஸ்பர கெளரவம், ஒத்துழைப்பு, ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ளல் ஆகிய நற்பண்புகளுடன் மனிதஉரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளுடனும், ஐ.நா அமைப்புடனும் அதன் அனைத்துலக கிளை நிறுவனங்களுடனும் நாம் எதிர்காலத்திலும் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment