Sunday, October 02, 2011

கூட்டமைப்புடனான பேச்சு நாளை இல்லை: தன்னிச்சையாக பிற்போட்ட அரசு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாளை திங்கட்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்த அரசியல்தீர்வு குறித்த பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் பிற்போட்டுள்ளது.

பேச்சுக்களில் பங்கேற்கும் அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள், எதிர்வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால், நாளை நடைபெறவிருந்த பேச்சுக்களை பிற்போட்டிருப்பதாக, அரசதரப்பு பிரதிநிதிகள் குழுவின் பேச்சாளரும், ஒருங்கிணைப்பாளருமான சஜின் வாஸ் குணவர்த்தன குறிப்பு ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.


நாளை நடைபெறவிருந்த பேச்சுக்கள் பிற்போடப்பட்டிருப்பதை அரசதரப்பு பேச்சுக்குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கொழும்பு வாரஇதழ் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்த சுற்றுப்பேச்சுக்கள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை, நாளை நடைபெறவிருந்த பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளதாக கேள்வியுற்றதாகவும், ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment