Monday, October 31, 2011

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்: பிரித்தானிய பிரதமர்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக பொருத்தமான விசாரணைகள் நடத்த இலங்கைக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டின் இரண்டாவது அமர்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கோரியுள்ளார்.

கொமன்வெல்த் உலகில் மிகப் பெரியதொரு அமைப்பு. உலகின் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகையையும், 6 கண்டங்களின் 54 நாடுகளையும் கொண்ட மிகப்பெரிய வலையமைப்பு. ஆனால் இந்த வலையமைப்புக்கு பலமான பெறுமானம் இருக்க வேண்டும்.

மதிப்புவாய்ந்தவர்களின் குழுவின் அறிக்கை இந்தப் பெறுமானத்தை குறிப்பாக உரிமைகள், சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அமையும் என்று நம்புகிறேன்.இது மிகவும் முக்கியமானது.

இலங்கை அரசின் மனிதஉரிமை நிலைமை மிகவும் உன்னிப்பாக ஆராயப்பட்டு வருகிறது. ஏனென்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அங்கு கொமன்வெல்த் மாநாடு நடக்கப் போகிறது.

தமிழ்ப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ஆயுதப்படைகளால் போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

என்ன நடந்தது- என்னென்ன போர்க்குற்றங்கள் இடம்பெற்றன- யார் பொறுப்பு என்று கண்டறிய பொருத்தமானதும் சுதந்திரமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment