Thursday, October 27, 2011

சிறிலங்கா தன்பக்க நியாயங்களை கூறிய போதிலும் தனது நிலையிலிருந்து மாறாத பான் கீ மூன்!!


சிறிலங்கா அதிபரின் தூதுவராக ஐ.நாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர் மகிந்த சமரசிங்க, நேற்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரின் மூன்றாம் குழுக் கூட்டத்தின், பக்கநிலைச் சந்திப்பாக இது இடம்பெற்றதாக சிறிலங்கா அரசு கூறியுள்ளது.


ஆனால் 2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கைக்கு அமைய, சிறிலங்காவுடன் நடைபெறும் ஐ.நாவின் கலந்துரையாடலின் ஒருபகுதியாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக ஐ.நா அறிவித்துள்ளது.

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக மேலதிக விளக்களையும் சிறிலங்கா தரப்பின் நியாயங்களையும் எடுத்துக் கூறவே, அமைச்சர் மகிந்த சமரசிங்கவை ஐ.நாவுக்கு அனுப்பியிருந்தார் மகிந்த ராஜபக்ச.
moon
அவர் சிறிலங்கா தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறியுள்ள போதும், ஐ.நா பொதுச்செயலர் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டுப் போரில் இருந்து முற்றாக மீள்வதற்கும், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பொறுப்புக் கூறுவது (போர்க்குற்றங்களுக்கு) முக்கியமானது என்று ஐ.நா பொதுச்செயலர், மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக ஐ.நா செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

வடக்கில் மீள்குடியமர்வு மற்றும் மீள்கட்டுமானப் பணிகளுடன், கௌரவமான அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய கலந்துரையாடல் நடத்தப்படுவதும் முக்கியமானது என்றும் பான் கீ மூன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நேற்றுக்காலை நடந்த இந்தச் சந்திப்பின் போது, எதிர்வரும் நவம்பர் 15ம் நாள் வெளியிடப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஒரு ஆண்டு கழித்து ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க சிறிலங்கா அரசின் சார்பில் மகிந்த சமரசிங்க காலஅவகாசம் கோரியதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக இன்னர்சிற்றி பிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மகிந்த சமரசிங்க, 2012 ஒக்ரோபரில் ஜெனிவாவில் நடைபெறும் மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் பாலித கொகன்னவும், பிரதித் தூதுவர் சவீந்திர சில்வாவும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment