தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு கொழும்பிற்குச் செல்வதற்கு முன்னர் இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய், தமிழ்நாட்டு முதல்வரை சந்தித்துக் கொண்டபோதே அவர் இவ்வாறு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
"சிறிலங்கா கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களானது தமிழ்நாட்டு மீனவர்கள் மீது மட்டும் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதலாக மட்டும் கருதப்படக் கூடாதென்றும், இது ஒட்டுமொத்தமாக இந்தியக் குடிமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களாகவும், இந்தியா என்ற நாட்டிற்கு எதிராக சிறிலங்காவால் மேற்கொள்ளப்படுகின்ற ஆத்திரமூட்டக் கூடிய செயலாகவும், ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவும் கருதப்பட வேண்டும்" எனவும் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் சிறிலங்கா கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களானது அயல்நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளால் இந்திய எல்லைப் புறங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களுக்கு ஒப்பானது எனவும் தமிழ்நாட்டு முதல்வர், இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மாத்தையாவிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
கடந்த மே மாதத்திலிருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் 16 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், இத்தாக்குதல்களை தேசிய பிரச்சினையாகவே நோக்க வேண்டும் என்றும், மாறாக தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகக் கருதக் கூடாதென்றும், முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதாக இந்திய அரசால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைத்தல் மற்றும் துன்புறுத்தல்களை விளைவித்தல் போன்றன அதிகம் இந்தியாவின் இராமநாதபுரம் மற்றும் நாகபட்டினம் போன்ற மாவட்டங்களுக்குச் சொந்தமான கடலிலேயே நடைபெறுவதாகவும், கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டு மீனவர்களுக்குச் சொந்தமான கடல் எல்லையில் குறிப்பாக நாகபட்டின மாவட்டத்தின் கடல் பிரதேசத்தில் சிறிலங்கா மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"சிறிலங்காவின் கடல் எல்லைக்கு வெளியே தொழிலில் ஈடுபடுத்தப்படும் படகுகள் சிறிலங்கா கடற்படையால் கண்காணிக்கப்படுவதாகவும், இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் சிறிலங்கா கடற்படையின் துணையுடனேயே மேற்கொள்ளப்படுவதாகவும்" தமிழ்நாட்டு முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவிற்கான தனது மூன்று நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் அங்கு சிறிலங்கா அதிகாரிகளுடன் பேச்சுக்களில் ஈடுபடும்போது இவ்வாறான விடயங்கள் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
சிறிலங்கா மீனவர்கள் என்ற போர்வையில் தமிழ்நாட்டு மீனவர்களை அச்சுறுத்தியவர்கள் உண்மையில் சிறிலங்காவின் கடற்படை வீரர்களாக இருக்கலாம் எனவும் முதல்வர் ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment