பொதுநலவாய
நாடுகள் தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடத்தப்படக் கூடாது என
அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கம் பிரேசர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2013ம் ஆண்டில் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது.
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை
எடுக்கப்படவில்லை எனவும் இதனால் மாநாட்டை நடத்தக் கூடாது எனவும் அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் சர்வதேச அனர்த்தக் குழு
போன்றவற்றினால் இலங்கை மீது பாரிய குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச ரீதியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து சில நாடுகள் பயங்கரவாத
இல்லாதொழிப்பு என்ற பெயரில் ஜனநாயக மீறல்களில் ஈடுபட்டு வருவதாக அவர்
குற்றம் சுமத்தியுள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் முர்டோச் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு மனித உரிமை விவகாரங்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சுயாதீன ஆணைக்குழு ஒன்றை உருவாக்குவதன் மூலம் பொதுநலவாய நாடுகள் அமைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment