Monday, October 03, 2011

மூவர்களின் மரணதண்டனையினை ரத்துசெய்யகோரி தமிழகம்எங்கும் உண்ணாவிரதபோராட்டம்

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 தமிழர்களின் உயிர்கள் காக்கப்பட வேண்டும், மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 02.10.2011 அன்று சென்னையில் காயிதே மில்லத் கல்லூரி அருகில் பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இந்த உண்ணாவிரத்தை துவக்கி வைத்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,
தமிழகத்தில் மரண தண்டனையை முற்றாக ஒழிக்கவும், மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்தவும், இன்று அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளில் உண்ணாவிரத அறப்போராட்டம் அண்ணன் நெடுமாறன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த உண்ணாவிரதத்தை துவக்கி வைப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

137 நாடுகளில் தூக்கு தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. ”தூக்கு தண்டனை என்பது திட்டமிட்டு கொலை செய்வதற்கு சமம்” என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் கிருஷ்ணய்யரே தெரிவித்துள்ளார். ”பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் கூடாது” என்று அண்ணால் காந்தியடிகள் சொல்லியுள்ளார். ஆகவே, தூக்கு தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 30 அன்று தூக்கு தண்டனையை தடை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு வந்த நாளில் கட்சி பாகுபாடின்றி தமிழக மக்கள் அனைவரும் பெரும் திரளாக வந்திருந்தனர். எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஒரு குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்டிருக்கும். அவ்வளவு அமைதியாக காந்திருந்தனர். ஆனால், இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டில் நடத்தாமல், வேறு மாநிலத்தில் நடத்த மனு செய்துள்ளார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும்.
நரேந்திரமோடிக்கு தீர்ப்பு வந்தபோது கூட, பட்டாசு வெடித்து கோஷம் எழுப்பி கொண்டாடினர். இது தவறு இல்லையா. ஒரு உயிருக்காக பல்லாயிரம் உயிர்களை கொன்று குவித்தீர்களே. அதற்கு என்ன பதில். இந்த மூன்று தமிழர்களுக்கு அந்த சம்பவத்தில் சம்பந்தமே கிடையாது என்று நாங்கள் உறுதியாக கூறுகிறோம்.
ஆனால் இந்த மூன்று பேரையும் தூக்கில் போட்டே ஆகவேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. அப்படி நடந்தால், நாங்கள் தெருத் தெருவாக சென்று ராஜீவ் அரசு தமிழர்களுக்கு செய்த கொடுமைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம் என்பதை மத்திய அரசுக்கு எச்சரிக்கிறோம். தூக்கு கயிறை அறுத்தெறிவோம் என்பதில் எங்களுக்கு சந்தேகமே இல்லை. தூக்கு தண்டனையை ரத்து செய்தே தீர வேண்டும்.
ஜனாதிபதி தனியாக எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது. மத்திய அரசு என்ன சொல்லுகிறதோ, அதைத்தான் ஜனாதிபதி செய்வார். இதற்கு பின்னால், சோனியா இருந்து இயக்குகிறார். அவருக்கு தெரியாமல் ஒரு இம்மியளவும் நகராது. மத்திய அவர்களை தூக்கில் போட்டே ஆகவேண்டும் என்று சொன்னால், தமிழக அரசு அதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அமைச்சரவையைக் கூட்டி, தீர்மானம் போட்டு அதை கவர்னருக்கு அனுப்ப வேண்டும். அதை அவர் ஜனாதிபதிக்கு அனுப்புவார். நிராகரித்த மனுவை திரும்ப ஏற்பதில் ஜனாதிபதிக்கு எந்த தடையும் கிடையாது. அதனால் தமிழக அரசு இந்த மூன்று பேரின் தூக்கை ரத்து செய்ய முன்வர வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
தனது பேச்சை முடித்துக்கொண்டு மேடையை விட்டு கீழே இறங்கிய வைகோ, இந்த உண்ணாவிரதப் பந்தலுக்கு வருகை தந்திருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று மாலை வரை பிரச்சாரத்திற்கு போகவேண்டாம். உண்ணாவிரதம் முடியும்வரை இங்கேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு புறப்பட்டார்.

No comments:

Post a Comment