Monday, October 03, 2011

தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதவழிகளில் போரிட முடியாது என்பது சிறீலங்கா அரசின் கற்பனையே – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நிறைவடைவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சிறீலங்கா மீதான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படும் என்ற தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புக்கள் குறைவடைந்துள்ளன.

எனினும் தம்மீதான நம்பிக்கைகளை தமிழ் மக்கள் இழந்துவிடாதவாறு மேற்குலகம் சில நடவடிக்கைகளைத் தக்கவைத்துள்ளது.
சிறீலங்கா அரச தலைவரின் நியூயோர்க் பயணத்தை அமெரிக்க அதிபர் புறக்கணித்ததும், சிறீலங்கா அரச தரப்பு எதிர்பார்க்காத தருணத்தில் சிறீலங்கா இராணுவத்தின் பிரதம போர்க்குற்றவாளியும், ஐ.நாவுக்கான சிறீலங்காவின் பிரதிப் பிரதிநிதியுமான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மீது தொடுக்கப்பட்ட வழக்கும், மேற்குலக கூட்டணி நாடு ஒன்றின் ஊடாக சிறீலங்கா அரசு மீது தீர்மானத்தை கொண்டுவர எடுத்த முயற்சியையும் நாம் இங்கு குறிப்பிடலாம்.
ஐ.நாவிற்கான சிறீலங்காவின் பிரதிப் பிரதிநிதியாக உள்ள ஒருவருக்கு அவரின் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் நீதிமன்ற அழைப்பாணை செல்லுபடியற்றது. எனவே தம்மீது எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என்ற இறுமாப்பில் மிதந்த சிறீலங்கா அரச தரப்புக்கு அமெரிக்காவின் நீதிமன்ற விதிகளில் உள்ள நுட்பங்களை ஆய்வு செய்து. சவீந்திர சில்வாவின் தனிப்பட்ட வதிவிடத்திற்கு அழைப்பாணையை அனுப்பி, அதனை மத்திய கிழக்கை சேர்ந்த அல்ஜசீரா தொலைக்காட்சி மூலம் உறுதிப்படுத்திய தமிழர் தரப்பின் மதிநுட்பம் மிகவும் வியக்கத்தக்க விடயம்.
அதனைப்போலவே சிறீலங்கா இராணுவத்தின் 57 ஆவது படையணியின் முன்னாள் கட்டளை அதிகாரியும், ஜேர்மனி, சுவிற்சலாந்து மற்றும் வத்திக்கானுக்கான து£துவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீண்டும் சுவிற்சலாந்து வந்தால் அவர் மீதான போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சுவிஸ் நீதி ஆணையாளர் அறிவித்துள்ளதும் சிறீலங்கா அரசுக்கு பலத்த அடியாகும்.
இரண்டாவது உலகப்போரின் போது சுவிற்சலாந்து மீது ஹிட்லர் தனது படைகளை ஏவவில்லை, ஏனெனில் போரில் வெற்றிபெற்ற பின்னர் தான் ஓய்வெடுக்கப்போகும் அழகிய தேசத்தை சிதைத்து அழித்துவிட அவர் விரும்பவில்லை. ஆனால் அன்று போர் நிறைவடைந்தபோது ஹிட்லர் ஓய்வெடுத்தது சுவிஸில் அல்ல கல்லறையில் தான். எனினும் முள்ளிவாய்க்காவில் 40,000 தமிழ் மக்களை, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள் என்ற வேறுபாடு இன்றி படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத்தின் போர்க்குற்றவாளிகளான படை அணிகளின் தளபதிகளை சிறீலங்கா அரசு திட்டமிட்டே சுவிஸ்இற்கும், நியூயோர்க்கிற்கும் ஓய்வெடுக்க அனுப்பியிருந்தது.
இது தமிழ் மக்களையும், சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்துவரும் மேற்குலகத்தையும் அவமதித்த செயலுமாகும். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மாற்றமடைந்த உலக விதிகளை தனக்கு சாதகமாக சிறீலங்கா அரசு பயன்படுத்திய போதும், அதில் உள்ள சில நுட்பமான சரத்துக்களை தமிழர் தரப்பும் பயன்படுத்தி சிறீலங்கா அரசின் இனவாதத்தையும், இறுமாப்பையும் சிதறடித்துள்ளது.
ஐ.நாவின் 66 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்த கருத்தும் சிறீலங்காவின் சர்வாதிகார அரசாட்சிக்கு அனுகூலமானதல்ல. வட ஆபிரிக்காவிலும், வளைகுடா நாடுகளிலும் தோற்றம் பெற்றுள்ள எழுச்சிகள் மற்றும் போராட்டங்கள் என்பன அங்கு ஆட்சியில் உள்ள கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு (Autocratic rulers) எதிரானது என அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கும் கச்சிதமாக பொருந்தும் என்பதுடன், சிறீலங்காவில் ஜனநாயக விதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் அமெரிக்கா தனது ஒவ்வொரு அறிக்கையிலும் வலியுறுத்தி வருகின்றது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17 ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசு மீது ஒரு தீ£மானம் கொண்டுவரப்படும் என்ற எதிர்பார்ப்புக்கள் எழுந்திருந்தன. ஆனால் சிறீலங்கா அரசின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என இந்தியா தெரிவித்த கருத்தை தொடர்ந்து சிறீலங்கா அரசு மீதான தீ£மானம் தற்போது நடைபெறும் 18 ஆவது கூட்டத்தொடருக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எனினும் செப்ரம்பர் மாதம் நடைபெறும் கூட்டத்தொடரில் தமக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்பதை அறிந்துகொண்ட சிறீலங்கா அரசு, அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நவம்பர் மாதம் சமாப்பிக்கப்படும் என்ற புரளியை கிளப்பி தனக்கு ஒரு கால அவகாசத்தை கேட்டிருந்தது. ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையை சிறீலங்கா அரசு திட்டமிட்டு நவம்பர் மாதத்திற்கு பிற்போட்டிருந்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடருக்கு ஐ.நா செயலாளர் நாகயம் பான் கீ மூன் தனது நிபுணர் குழுவின் அறிக்கையை அனுப்பியதுடன், தனிப்பட்ட கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார். வடஅமெரிக்க நாடு ஒன்றின் ஊடாக சிறீலங்கா மீது ஒரு தீர்மானத்தை முன்வைக்கும் பாவனையையும் மேற்குலகம் ஏற்படுத்தியிருந்தது.
கடந்த வியாழக்கிழமை (22) மதியம் ஒரு மணிக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அறிந்த சிறீலங்கா அரசு கொழும்பு திரும்பிய தனது அமைச்சர் மகிந்தா சமரசிங்காவை அவசரமாக மீண்டும் ஜெனீவாவுக்கு அனுப்பிய போதும், சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு காலஅவகாம் வழங்கும் நோக்கத்துடன் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் நாம் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்பதற்கு அப்பால் சிறீலங்கா அரசின் ராஜபக்ச கூட்டணி கடுமையாக மிரட்டப்பட்டுள்ளது என்பதும் உண்மையானது.
கொழும்பு வந்து சென்ற அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக்கும் சிறீலங்கா அரசின் நவம்பர் மாதக் காலக்கெடுவை திட்டவட்டமாக உறுதிப்படுத்தியே சென்றுள்ளார். எனவே எதிர்வரும் நவம்பர் மாதமும், அடுத்துவரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத்தொடரும் சிறீலங்கா அரசுக்கு அனுகூலமாக இருக்கமாட்டாது. அதனை உறுதிப்படுத்த வேண்டிய கடமை புலம்பெயர் தமிழ் மக்களுக்கே உண்டு.
அனைத்துலக மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் அரசியல் மற்றும் இராஜதந்திர நகர்வுகள் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஒருங்கிணையும் தமிழ் மக்களின் பலமும் அதற்கு வழியை ஏற்படுத்தும். இஸ்ரேல், பாலஸ்த்தீனம் என்ற இரு தேசங்கள் ஐ.நாவின் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற பாலஸ்த்தீன அதிபர் மகமூட் அபாஸ் இன் கோரிக்கையும் தமிழர் தரப்புக்கு சில தகவல்களை எடுத்துரைத்துள்ளது.
63 வருடங்களாக பாலஸ்த்தீன மக்கள் சந்தித்த துன்பங்களும், இழப்புக்கள் போதும் என்ற அவரின் வாதம் ஐ.நா வட்டாரத்தை அனுதாபத்திற்குள் தள்ளியுள்ளது. 1967 ஆம் ஆண்டு காணப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் இரு நாடுகள் என்ற கொள்கைகள் செயற்படுத்தப்படும் என கடந்த மே மாதம் அமெரிக்க அதிபர் தெரிவித்தபோதும், கடந்த வாரம் இடம்பெற்ற அவரின் பேச்சில் அது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தக்கூடும் என்ற கணிப்புக்கள் எழுந்துள்ளபோதும், மத்தியகிழக்கில் அமைதியை உருவாக்குவதற்கு பாலஸ்தீன மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதே முதலாவது படியாகும் என்பதையும் அமெரிக்கா நன்கு அறியும்.
சோவியத்தின் உடைவு, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுவரும் ஆட்சி மாற்றங்கள், ஈராக், ஆப்கானிஸ்த்தான் போர், லிபியாவில் து£க்கி எறியப்பட்டுள்ள கேணல் கடாபியின் ஆட்சி என்பன ஒன்றை உணர்த்தியுள்ளன. அதாவது எதிர்காலத்தில் இஸ்ரேல் என்ற நாட்டின் உதவி அமெரிக்காவுக்கு தேவையா என்பதே அதுவாகும். பசுபிக் பிராந்தியத்தில் இருந்து, இந்து சமுத்திரப் பிராந்தியத்தை நோக்கி நகர்ந்துள்ள பூகோள அரசியலும் அதற்கு வலுச்சேர்த்துள்ளது.
விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துவிட்டோம், தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதவழிகளில் போரிட முடியாது என்ற சிறீலங்கா அரசின் கற்பனைகள் எல்லாம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை சிறீலங்கா அரசு எவ்வாறு கையாளப்போகின்றது என்பதில் தான் தங்கியுள்ளது. ஏனெனில் ஒரு நாட்டில் உள்நாட்டு போரை சில மணிநேரத்திற்குள் உருவாக்குவது எவ்வாறு என்பதற்கு லிபியா மீதான நேட்டோ படையின் தாக்குதல் மிகச்சிறந்த உதாரணம். எதிர்க்கட்சிகள் அற்ற நிலையில், எந்த ஒரு ஆயுதக்குழுக்களும் அற்ற நிலையில் 42 வருடங்களாக கடாபியின் ஆட்சியில் இருந்த லிபியாவில் சில மணி நேரத்திற்குள் ஒரு உள்நாட்டு போர் ஏற்படுமாக இருந்தால் சிறீலங்காவில் அதனை உருவாக்குவது மிகவும் சுலபமானது.
அதனை உணர்ந்துதானோ என்னவோ சிறீலங்கா அரசு வடக்கு கிழக்கில் தனது படை வளத்தை அதிகரித்து வருகின்றது. ஆனால் மூன்றாவது நாடு ஒன்றின் துணையுடன் மேற்கொள்ளும் படை நடவடிக்கையை எதிர்கொள்ளும் நிலையில் சிறீலங்கா படைத்தரப்பு உள்ளதா என்பதே தற்போதைய கேள்வி. லிபியாவின் வான்படை மற்றும் பீரங்கிப்படைகள் முடக்கப்பட்ட நிலையில் நடைபெற்ற போரை தமிழர் தரப்பு நன்கு நினைவில் கொண்டுள்ளது. அம்பாந்தோட்டையை அடைமானம் வைத்து தமிழர்களின் தாயகப்பகுதிகளை சிறீலங்கா அரசு கைப்பற்றுவது சாத்தியமானதாக இருந்தால், திருமலை துறைமுகத்தையோ அல்லது காங்கேசன்துறை துறைமுகத்தையே அடைமானம் வைத்து இழந்த பகுதிகளை தமிழர் தரப்பு மீட்டுக்கொள்வதும் சாத்தியமானது ஒன்றே.
ஈழமுரசு

No comments:

Post a Comment