நவநீதம்பிள்ளை
அம்மையார் இலங்கை வந்ததும் அவருக்கு நமது நாட்டுத் தேயிலையில் மிகவும்
சுவையாகத் தேநீர் தயாரித்து வழங்கவேண்டுமே தவிர, அவர் போதிக்கும்
உபதேசங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடாது. இவ்வாறு அரசுக்கு ஆலோசனை
வழங்கியுள்ளது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம். ஐ.நா. மனித உரிமை கள்
பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில்
இலங்கை வரவுள்ளார்.
நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயம் குறித்து கருத்து வெளியிடும் போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
இலங்கைக் கலாசாரத்தின்படி நவநீதம்பிள்ளையை அரசு வரவேற்கவேண்டும்.நாட்டுக்குள் பிரவேசித்தவுடன் நமது நாட்டுத் தேயிலையில் மிகவும் சுவையாக தேநீர் தயாரித்து வழங்கவேண்டும். அவர் தேநீர் அருந்திய பின்னர், "போய் வாருங்கள் அம்மையாரே'' எனக் கூறி வழியனுப்பி வைக்கவேண்டும். மாறாக, உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பதற்கு நவநீதம்பிள்ளைக்கு இடமளிக்கப்படுமானால், அது எமது நாட்டுக்கு உகந்ததாக அமையாது.அவர் போதிக்கும் ஞான உபதேசங்களை அரசு புறந்தள்ளிவிட்டு, ஏனைய விடயங்களைப் பற்றி சிந்திக்கவேண்டும். உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கான அனுமதியை நாம் எவருக்கும் வழங்கக்கூடாது. இந்த விடயத்தில் அரசு உறுதியாக இருக்கவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment