பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (19.12.2011) நிதி ஒதுக்கீட்டுக்கான குழுநிலைவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
தமிழ் மக்களை தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. கூட்டமைப்பு மனந் திருந்தி வந்து எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினை தீர்வுக்கு தமது பங்களிப்பையும் செலுத்தினால் மகிழ்ச்சியுடன் வரவேற்க முடியும். ஆனால், கூட்டமைப்பை மட்டும் அரசியல் தீர்வுக்கு இணங்க வைக்க முடியாது. ஏனென்றால் அது ஒரு தேர்தல் கூட்டு என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
அரசியல் நடத்த வந்தவர்கள் வியாபாரம் நடத்துகின்றார்கள். வியாபாரம் நடத்த வந்தவர்கள் அரசியல் நடத்துகின்றார்கள். அரசியல் பாதி! வியாபாரம் பாதி! இரண்டும் கலந்த கலவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கு எமக்குக் கிடைத்திருந்த பொன்னான சந்தர்ப்பங்களில் முதன்மையானது இலங்கை இந்திய ஒப்பந்தமாகும். ஆனால் அதை சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளில் ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளாமலும், மறுசாரார் ஏற்றுக் கொண்டும் அதனை சரிவர பயன்படுத்தாமலும் இருந்ததால் இத்தனை அழிவுகளுக்கு முகங்கொடுத்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வுக்கு விருப்பமின்றி தமிழ்த் தலைமைகள் தவறான வழியில் செயற்பட்டதால், உரிமைப்போராட்டமானது அழிவு, யுத்தமாக மாற்றப்பட்டு எமது மக்கள் அவலங்களையும் அழிவுகளையும் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பங்களே இங்கு அதிகமாக இருந்தன.
இந்த நிலைமைக்கு மூல காரணமாக இருந்த தமிழ்ப பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை ஆரம்பத்திலேயே தீர்க்கப்பட்டிருந்தால், இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன மக்களின் சமூக பொருளாதார, வாழ்வாதார நிலைமைகள் உயர்ந்திருக்கும். ஆனால், பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் நீடித்துக் கொண்டிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றங்கள் என்று சொல்லப்படுபவைகளை விடவும் அதற்குக் காரணமாக இருந்த அரசியல் குற்றங்களே பிரதானமானவை. அரசியல் குற்றங்கள் என்று நோக்கினால் யாரும் யார் மீதும் தவறுகளை சுமத்தி விட்டி தப்பித்து விட முடியாது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ பயங்கரவாதத்தை துணிச்சலோடு முடிவிற்குக் கொண்டுவந்துள்ளார். அதேபோல் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கும் தீர்வு காண்பார் என்பது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் தனிமனித பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் யுத்தத்திற்கு பின்னரான சூழல் என்பது படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகின்றதாகவும் உயிர் வாழ்தல் குறித்த நம்பிக்கைகள் இங்கு வளர்ந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment