Friday, April 25, 2014

சிறிலங்காவில் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் - ஐ.நா உயர்பிரதிநிதி கவலை

சிறிலங்காவில் தமிழ்ப் பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவுகள் குறித்து ஐ.நாவின் உயர்பிரதிநிதி சாய்னாப் ஹவா பங்குரா (Zainab Hawa Bangura) கவலை வெளியிட்டுள்ளார்.

மோதல்கள் நிலவும் இடங்களில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐ.நா பொதுச்செயலரின் சிறப்புப் பிரதிநிதியான சாய்னாப் ஹவா பங்குரா நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இதன்போது, சிறிலங்காவில் குறிப்பாக தமிழ்ப் பெண்களை இலக்கு வைத்து பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்படுவதான அறிக்கைகள் கிடைத்து வருவது தொடர்பாக, ஐ.நா ஏதாவது நடவடிக்கை எடுத்துள்ளதா என்று, இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியது.


அதற்குப் பதிலளித்த சாய்னாப் ஹவா பங்குரா, இதுகுறித்து தாம் கரிசனை கொள்வதாகவும் கவலையடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தாம் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதிநிதி பாலித கொஹன்னவுடன் பேசியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment